வீட்டை ஒத்திக்கு (lease ) முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..
மாத வருமானம் உள்ளவர்களுக்கு வாடகை வீட்டுக்குப் போவது பிரச்னையில்லை எப்படியும் சம்பளம் வந்துவிடும் வாடகைகொடுத்துவிடலாம்.
சொந்தமாக பிசினஸ் செய்பவர்களுக்கு மாத வாடகை கொடுப்பது பெரிய பிரச்னை அவ்வப்போது மொத்தமாக வருமானம் வரும் திடீரென எதிலாவது முதலீடு செய்யவேண்டியிருக்கும்.
எனவே, அவர்கள் வாடகை வீட்டுக்குச் செல்வதைவிட ஒரு தொகையைக் கொடுத்து ஒத்திக்கு ஒப்பந்தம் செய்துவிட்டால் மாதந்தோறும் வாடகை செலுத்தும் தொல்லை இருக்காது.
மேலும் கொடுத்த தொகையை ஒத்தி முடியும்போது அப்படியே வாங்கிக் கொள்ளலாம்
பெரும்பாலானோர் இப்போது ஒத்திக்குச் செல்வதைத்தான் விரும்புகிறார்கள்.
ஆனால், அப்படி ஒத்திக்குப் போவதிலும் சில பிரச்னைகள் இருக்கின்றன.
வீட்டை ஒத்திக்கு முடிக்கும்முன் சட்டரீதியாகச் செய்யவேண்டிய விஷயங்கள் என்னென்ன
ஒத்தி ஒப்பந்தக்காலம் முடிந்தபின்பு, வீட்டு உரிமையாளர் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் எப்படி வசூல்செய்வது?
இதுபற்றி வழக்கறிஞர் பேசினோம்
"வாடகைக்கு வீடு பார்ப்பதுபோல, ஒத்திக்கு சட்டென வீட்டைப் பார்த்து முடித்துவிடக் கூடாது.
ஏனெனில் வாடகை வீட்டிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேறிக்கொள்ளலாம்.
ஆனால், ஒத்திக்கு இருக்கும் வீட்டிலிருந்து ஒப்பந்த காலத்துக்கு முன்னர் திடீரென வெளியேற இயலாது.
குடியிருப்பவரின் பணம், வீட்டு உரிமையாளரிடம் லாக் ஆகியிருப்பதால் வீட்டிலிருந்து அவ்வளவு எளிதாக வெளியேறமுடியாது.
ஒத்திக்குச் செல்லும்போது சில லட்சங்களை வீட்டு உரிமையாளர்வசம் ஒப்படைக்கிறோம்.
அந்தப் பணத்துக்கு எந்த அளவுக்குப் பாதுகாப்பு என்பது குறித்து சிந்திக்கவேண்டும்.
இதிலென்ன சிக்கல் வந்துவிடப்போகிறது, நாம்தான் ஒப்பந்தம் போட்டுவிடுகிறோமே?'
என்று நீங்கள் எண்ணலாம்.
ஆனால் சென்னை போன்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டை ஒரு நடுத்தரக் குடும்பத்தினர் ஒத்திக்கு முடித்தார்கள்.
சேமிப்புப்பணம் ரூ.6 லட்சம், நகைகள், குழந்தைகள் சேமிப்பின்மூலம் திரட்டிய ரூ.4 லட்சம் சேர்த்து பத்து லட்சம் ரூபாய்க்கு வீட்டை ஒத்திக்குப் பேசிமுடித்து குடியேறினார்கள்.
ஒருநாள் திடீரென வங்கி அதிகாரிகள் சிலர் அந்த வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.
அந்த வீட்டின் உரிமையாளர் வாங்கிய வங்கிக்கடனைக் கட்டத்தவறியதால் அந்த வீட்டை வங்கி கையகப்படுத்தவுள்ளதாகக் கூறியுள்ளனர்.
வங்கிக்கடன் வசூல் தீர்ப்பாயத்தின் (Debts Recovery Tribunal) உத்தரவுப்படி இன்னும் ஒரு வாரத்துக்குள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டுமென்றும், குடியிருப்பவரிடம் கெடு விதித்துள்ளனர்.
அதுதொடர்பான அறிவிப்பு நோட்டீஸ் ஒன்றையும், வீட்டுச்சுவரில் ஒட்டிச்சென்றுள்ளார்கள்.
குடியிருப்பவருக்கோ அதிர்ச்சி தனது பணம் பத்து லட்சத்தையும் கொடுத்து, வீடும் இல்லாமல் போவதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.
அதன்பின்னர் விசாரித்தபோதுதான், வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டின்பேரில் 40 லட்சம் கடன் பெற்றுள்ளது தெரியவந்தது.
அதை ஒழுங்காகத் திருப்பிச்செலுத்தாததால் அதற்கான அபராதத்தொகையும் சேர்த்து 50 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
அதை மறைத்துத்தான் அந்த வீட்டை பத்து லட்சம் ரூபாய்க்கு ஒத்திக்குக் கொடுத்திருக்கிறார்.
இந்த விவரம் தெரிந்தபிறகு தனது பத்து லட்சம் ரூபாயைத்திரும்பப் பெறுவதற்காக ஒத்திக்கு வந்தவர் பெரிய சட்டப்போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.
இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, ஒத்திக்கு வீடு முடிக்கும் முன்பாக ஒரு சட்ட ஆலோசகரின் மூலமாக அந்த வீட்டின் உரிமை ஆவணங்களை (Title Deeds) முழுவதும் வாங்கி சரிபார்த்து, அந்த வீட்டை ஒத்திக்கு விடும் நபர் சரியானவர்தானா என்பதை தெரிந்து கொள்ளுவது அவசியம்.
எனவே, வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்றபின் ஒத்திக்குச்செல்வதே சரியான செயல்.
வீட்டு உரிமையாளர், தான் பெற்ற ஒத்தித்தொகையைத் திருப்பியளிக்க மறுத்தால்,
அவர்மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுத்து, சட்டரீதியாக வழக்கு தொடுக்கலாம் என்று வழக்கறிஞர்கள் மூலம் பணத்தை மீட்கலாம்.
Social Plugin