தேடல் பெட்டகம்

உழைக்கும் சிறார்களுக்கான தேசிய கொள்கை


 இந்தியாவில் சிறார் உழைப்பு அகற்றுதலுக்கான திட்டங்களும், செயல்பாடுகளும்

நோக்கம்

உலக அரங்கில் இந்தியா அதிக அளவில் உழைக்கும் சிறார்களைக் கொண்ட ஒரு நாடாக உள்ளது என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மையாகும். இச்சிறார்கள் ஆறு வயதிலிருந்து பதினான்கு வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். விளையாடவும் பள்ளி சென்று படிக்கவும் வேண்டிய வயதில் இச்சிறார்கள் குடும்ப வறுமையைப் போக்க உடலை வருத்தி உழைக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண் குழந்தைகளாவர். இந்த உழைக்கும் சிறார்கள் மிகவும் மோசமான, ஆபத்தான, சுகாதாரமற்ற சூழலில் தினமும் உழல்கிறார்கள் என்பதை அவர்களின் கொத்தடிமை வாழ்க்கை முறையினைக் காணும் போது நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

வறுமையே குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதற்கு அடிப்படைக் காரணமாயிருப்பினும், பல இடங்களில் போதுமான ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் இல்லாமை அல்லது குழந்தைகள் நடந்து சென்று வரும் தூரத்தில் பள்ளிகள் இல்லாமை, பெற்றோரால் குழந்தைகளின் கல்விக்குத் தேவைப்படும் நிதிச் சுமையை தாங்க முடியாத நிலை போன்றவையே தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதைக் காட்டிலும் வேலைக்கு அனுப்புவதை பெற்றோர் விரும்ப முக்கிய காரணங்களாகிறது. இந்தக் காரணங்களோடு இணைந்துள்ள மற்ற காரணிகள் எவை என்று பார்த்தால் பெரியவர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, கல்வியறிவின்மை மற்றும் கடுமையான சமூக - பொருளாதார நெருக்கடி ஆகியவை குழந்தைகளின் தோள்களில் சுமையேற்றுகின்றன.

உழைக்கும் சிறார்கள் நம் நாட்டில் அதிக எண்ணிக்கையில் இருப்பதற்கு காரணம், சிறார் உழைப்பு முறை பரவலாக பெற்றோராலும், தொழில் செய்வோரில் கணிசமானவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது தான்.

பெற்றோரின் இயலாமை மனநிலையே சிறார்களை வேலைக்கு அமர்த்துவதில் கணிசமான பங்கு வகிக்கிறது. தற்போதைய தொழில், வேலைவாய்ப்பு நெருக்கடியில் படிப்பில் காலத்தை வீணாக்குவதை விட தங்கள் பிள்ளைகள் ஏதாவது ஒரு தொழில்திறனை வளர்த்துக் கொள்வது அவசியம் என்று பெற்றோர் எண்ணுவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இது ஒரு பக்கமெனில், மறுபக்கத்தில் வறுமையும் பலவீனமான சமூக பாதுகாப்பு வளையமும் இணைந்து சிறுவர்களை கொத்தடிமைகளாக்கும் அவலமும் நடைமுறையிலிருந்து இன்னும் விலகாமலேயே இருக்கின்றன. வெறும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாயை கடனாகப் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாக பணம் கொடுக்கும் நிலச்சுவந்தார் அல்லது தொழில் நடத்தும் முதலாளிகளின் பண்ணை, தொழில் பட்டறைகளில் வருடக் கணக்கில் தன் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தி, அவர்களின் உழைப்பை சுரண்ட பெற்றோரே அனுமதிக்கும் அவலம் நம் நாட்டில் ஏதாவதொரு இடத்தில் நடந்து கொண்டுதானிருக்கிறது.

நில பிரபுக்கள், செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழில் நடத்துவோர், தையற் கடைக்காரர்கள், செங்கல் சூளை தொழில் செய்வோர், கல்குவாரி உரிமையாளர்கள் போன்றோர் ஆண்டாண்டு காலமாக, தலைமுறை தலைமுறையாக சிறார்களை வேலைக்கமர்த்தி பழகிப் போனவர்களாவர். இவர்களைப் பொருத்தவரை சிறார்களை வேலைக்கு அமர்த்துவது என்பது சட்டப்படி குற்றம் என்பதை உணரவில்லை. அச்சிறார்களை விடுவிக்க வேண்டும், அவர்களும் படிப்பறிவு பெற வேண்டும். அது அச்சிறார்களின் உரிமை என்பதையும் இம்முதலாளிகள் ஏற்க மறுக்கிறார்கள் என்பதே அப்பட்டமான உண்மையாகும். எனவே தான் இன்னும் சிறார் உழைப்பு முறையை நம் நாட்டில் அறவே ஒழிக்க முடியவில்லை.

முதலாளிகள் சிறார் உழைப்பு முறை நீடிக்க வேண்டும் என்று விரும்புவதன் காரணங்கள்

எல்லோருக்கும் தெரிந்தது தான்; சிறார்கள் புகார் சொல்வதோ, எதிர்த்துப் பேசுவதோ கேள்வி கேட்பதோ இல்லை. முதலாளிகள் கொடுக்கும் சொற்ப கூலிக்கு வாய் திறக்காமல் பணிந்து வேலை செய்கின்றனர். இதனால் தொழில் நடத்துபவர் பெருத்த லாபம் ஈட்டுகிறார்.

உழைக்கும் சிறார்களின் அடையாளங்கள்

உழைக்கும் சிறார்கள் பெயரோ, முகமோ, குரலோ- எந்த அடையாளங்களும் வெளித் தெரியாமல் ஆயிரக்கணக்கில் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் எல்லாத் தொழில்களிலும் தங்களின் உரிமைகள், கல்வி, உடல் நலன், பொழுதுபோக்கு ஆகியவற்றை இழந்து இன்னும் சொல்லப் போனால் சில ஆபத்தான வேலைகளில் இரத்தமும் உடலும் வற்ற உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சிறுவர்களின் உழைப்பு அவர்களின் வளர்ச்சிக்குப் பயன்படாத வகையில் சுரண்டப்படுவதோடு, அவர்களின் வளமான எதிர்காலத்தையும் பாழடிக்கிறது.

குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள்

குழந்தைகள் நலனுக்கான சர்வதேச அமைப்பான யுனிசெப் நிறுவனம் குழந்தைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை மூன்று வகையாகப் பிரிக்கிறது.

அவை;

  • உடல் ரீதியான பாதிப்பு
  • உளவியல் ரீதியான பாதிப்பு
  • உணர்வு ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்படும் பாதிப்பு

உடல் ரீதியான பாதிப்பு

கொடிய வறுமை, ஊட்டச்சத்துக் குறைவு, கல்வியறிவு பெற முடியாத நிலை, உடல் நலனை பாதிக்கக்கூடிய ஆபத்தானச் சூழல் (அதிக வெப்ப நிலையில் கொதிக்கும் உலைகள், தூசுப்புகை, அசுத்தம் நிறைந்த, காற்றோட்டம் இல்லாத குறுகிய அறை) போன்றவை சிறார்களின் உடல் நலனைப் பெரிதும் பாதிப்பதால் இக்குழந்தைகள் ஆஸ்துமா, காசநோய் போன்ற ஆபத்தான நோய்களின் தாக்குதலுக்கு இலக்காகின்றனர். பெரியவர்கள் செய்யத் தயங்கும் மோசமான வேலைகள், குழந்தைகளின் தலையில் கட்டப்படுகின்றன. ஏனெனில், அவர்கள் மோசமான வேலைச் சூழலைப் பற்றி யாரிடமும் குறை கூறவோ, எதிர்த்துப் போராடவோ திறனற்றவர்களாகத் தவிக்கின்றனர். இவ்வாறான மோசமான காரணிகளால் இச்சிறார்கள் சூழப்பட்டுள்ளதால் அவர்கள் பல நோய்களின் தாக்குதலுக்கு இலக்காகி, உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் வளர்ச்சி பாதிக்கப்பட்டு நாளடைவில் உழைக்கத் திராணியற்று பருவ வயதை அடைவதற்குள் மடிந்து போனவர்கள் ஏராளம்.

உளவியல் ரீதியான பாதிப்பு

கல்வி மூலமாகவே குழந்தைகள் அறிவுத்திறன் பெற்று மனதளவிலும் உணர்வுப்பூர்வமாகவும் வளர முடிகிறது. மனரீதியான வளர்ச்சி என்பது எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் நடைமுறை வாழ்க்கை முறையினைப் பற்றிய பொதுவான விஷய ஞானம் பெறுதல் போன்றவை உள்ளடங்கியதாகும். வேலைப்பளுவானது குழந்தைகளின் பெரும்பான்மையான நேரத்தை ஆக்கிரமிப்பதால் அவர்கள் பள்ளி செல்லவும் கல்வி பெறவும் இயலாத நிலை ஏற்படுகிறது.

அப்படியே அவர்கள் வேலைக்குச் சென்று விட்டு வகுப்புகளுக்கு வரும் போது பாடங்களில் ஆர்வத்துடன் ஈடுபடமுடியாமல் அதிக களைப்புடனும் சோர்வுடனும் வாடி விழுகின்றனர்.

உணர்வு ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்படும் பாதிப்பு

படிப்பறிவு பெறமுடியாமல் தினக்கூலியாக வேலை செய்து வறுமையை விரட்ட தினமும் போராடும் நிலைக்கு சிறு வயதிலிருந்து ஆளாவதால் நன்றாக உழைத்து சம்பாதிக்கும் வலுவுள்ள வாலிபப் பருவத்திலும் இவர்கள் தினக்கூலி என்கிற நிலையிலிருந்து முன்னேற முடியாமல் உழலும் போது சமூகத்தில் இவர்களால் ஒரு நல்ல நிலையை அடையவோ, வறுமையின்றி குடும்பத்தை நடத்தவோ முடியாமல் போகிறது. இதன் காரணமாக சமூகத்தால் புறக்கணிக்கப்படுகின்றனர்.

பெண் குழந்தைத் தொழிலாளர்களின் அவலநிலை

பெண் குழந்தைத் தொழிலாளர்கள் பெரும்பாலும் வீட்டு வேலைகளிலும் மற்றும் வெளி வேலைகளான விவசாயக் கூலி வேலை, கல் குவாரி, செங்கல் சூளையில் கல் சுமத்தல், செயற்கை வைரம் பட்டை தீட்டுதல், விறகு வெட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆண் சிறார்களைவிட இச்சிறுமிகளே வேலை செய்யுமிடங்களில் மிகவும் தொல்லைக்கு ஆளாகின்றனர். உச்சகட்டமாக பாலியல் பலாத்காரத்துக்கும் ஆளாகின்றனர். இச்சிறுமிகளின் துயரமோ, இவர்களின் உழைப்பு சுரண்டப்படும் அவலமோ பல நேரங்களில் வெளி உலகுக்குத் தெரியாமலேயே போய் விடுகிறது.

பெரு நகரங்களில் வறுமையில் தவிக்கும் சிறுமிகள் ஏமாற்றப்பட்டு வஞ்சகமாக விபச்சாரத்திலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். எங்கோ ஓரிடத்தில் ஒரு சில தொண்டு நிறுவனங்கள் ஒரு சில சிறுமிகளை இக்கொடுமைகளிலிருந்து மீட்டு அவர்களின் துயரங்களை வெளியுலகுக்கு தெரிவிக்கிறது. வெளியே தெரியாமல், விலங்கினும் கேவலமாக நடத்தப்படும் பல சிறுமிகள் மீட்க ஆளின்றி தவிக்கின்றனர். அவர்களின் துயரங்கள் வெளியுலகுக்குத் தெரியாமலேயே போய் விடுகிறது.

சிறார் உழைப்பு அகற்றல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள்

சிறார் உழைப்பை ஒழிக்க நம் நாட்டில் முதன் முதலில்  1933 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1938 ஆம் ஆண்டு குழந்தைகள் வேலை தொடர்பான சட்டம் இயற்றப்பட்டது. தொடர்ச்சியாக பன்னிரெண்டு சட்டங்கள் வந்தன. அவை படிப்படியாக வளர்ந்து தொழிலாளர்களாக வேலை செய்யும் குழந்தைகளுக்கு சட்டப் பாதுகாப்பு வேண்டும் என்பதை வலியுறுத்தின.

சிறார்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்க இயற்றப்பட்ட சட்டங்கள்

  • தொழிற்சாலைகள் சட்டம்
  • சுரங்கச் சட்டம்
  • தோட்டத் தொழிலாளர் சட்டம்

போன்றவை சிறார்களின் உடல் நலன் மற்றும் அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் தொழில்களில் அவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுப்பதற்காகவே இயற்றப்பட்டவையாகும். சிறார் உழைப்பு (தடை மற்றும் ஒழுங்கு முறை) சட்டம் 1986 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இச்சட்டமானது 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கேடு விளைவிக்கும் தொழில்களில் ஈடுபடுத்துவதைத் தடுக்கிறது. மேலும் இச்சட்டம் மற்ற வேலைகளில் குழந்தைகளின் வேலைச் சூழலை ஒழுங்குபடுத்துகிறது.

உழைக்கும் சிறார்களுக்கான தேசிய கொள்கை

சுதந்திரத்துக்குப் பின் பல கட்ட முயற்சிகளை சட்டரீதியில் மத்திய அரசு மேற்கொண்டிருப்பினும் 1987 ஆம் ஆண்டு மத்திய அரசு உழைக்கும் சிறார்களுக்கான தேசிய கொள்கையினை வகுத்து அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் அறிவித்தது. இந்தத் தேசிய கொள்கையானது மூன்று முக்கிய செயல் திட்டங்களைக் கொண்டிருந்தது. அவை:

  • சட்ட ரீதியிலான செயல் திட்டம்
  • சாத்தியப்படுகிற எல்லா வழிகளிலும் சிறார்கள் பயனடையும் வகையில் அமைந்த பொதுவான வளர்ச்சித் திட்டங்கள்
  • சிறார்கள் கூலிக்கு அதிக எண்ணிக்கையில் வேலைக்கு அமர்த்தும் முறை நடைமுறையில் உள்ள பகுதிகளுக்கான திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சிறப்பு செயல் திட்டம்

தேசிய சிறார் உழைப்பு அகற்றல் திட்டம்

சிறார் உழைப்பு அகற்றலுக்கான தேசிய கொள்கையானது 1987 ஆம் ஆண்டு ஏழாவது ஐந்தாண்டு திட்டக் காலத்திலேயே மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆபத்தை விளைவிக்கும் தொழில்களில் சிறார்களை அதிகம் ஈடுபடுத்தப்படும் பகுதிகளைக் கண்டறிந்து ஒன்பது சிறப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு தேசிய சிறார் உழைப்பு அகற்றல் திட்டமானது சம்பல்பூர், தாணே மற்றும் கார்வா ஆகிய பகுதிகளில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டமானது கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகப்படுத்தப்பட்டு, படிப்படியான வளர்ச்சியைக் கொண்டதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகு முறைகளைக் கொண்டதாகவும் இருந்தது.

சிறார் உழைப்பு முறை அதிகம் நடைமுறையில் இருக்கும் பகுதிகளில் அரசு அதிக கவனம் செலுத்தி சிறார் உழைப்பு அகற்றல் நடவடிக்கையை அவசியம் அமல்படுத்த வேண்டிய அதே வேளையில் சிறார் உழைப்பு பிரச்சினை நாடு முழுவதும் அதிக அளவில் பரவியிருந்ததால் இத்திட்டத்தின் முக்கியத்துவமும் அவசியமும் உணரப்பட்டது.

சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்ட அதே 1994 ஆம் ஆண்டு அப்போதைய பிரதம மந்திரி சிறார் உழைப்பு அகற்றல் தொடர்பான ஒரு பிரகடனத்தை அறிவித்தார். இந்த அறிவிப்பின் பயனாக 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி சிறார் உழைப்பு அகற்றுதலுக்கான ஒரு தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையமானது மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரைத் தலைவராகவும் உழைக்கும் சிறார் நலன் தொடர்புடைய தொழிலாளர் நலத்துறை, கல்வித் துறை, நலத்துறை, ஜவுளித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நிதித்துறை போன்ற பத்து அரசுத் துறை அதிகாரிகளைப் பிரதிநிதிகளாகவும் கொண்ட அமைப்பாக இருந்தது. முன்பே ஆரம்பிக்கப்பட்ட 12 திட்டங்கள் உட்பட 1995-96 இல் 76 சிறார் உழைப்பு அகற்றல் திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இத்திட்டங்களின் கீழ் 1800 சிறப்புப் பள்ளிகள் தொடங்கப்பட்டு 2500 ஆசிரியர்களைக் கொண்டு 1.05 லட்சம் சிறார்கள் கேடு விளைவிக்கக் கூடிய வேலைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

ஒவ்வொரு பள்ளியும் மூன்றாண்டு சுழற்சி முறையில் நடத்தப்படுகிறது. முதல் இரண்டு ஆண்டுகள் செயல் முறை எழுத்தறிவு அளிக்கப்பட்டு அச்சிறார்கள் பள்ளிக் கல்வியில் குறிப்பிட்ட வகுப்புக்குச் சமமான தகுதிக்கு உயர்த்தப்படுகின்றனர். பிறகு மூன்றாண்டு தொழிற் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இப்பரிட்சார்த்த திட்டத்தின் மைய நோக்கம் யாதெனில் சிறார்கள் கல்வியிலும் தொழில் முனைப்பிலும் நன்கு தேற்றப்பட்டு எல்லா வகையிலும் வலுவுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்துடன் வாலிபப் பருவத்தை அடையும் போது சரியான தொழில் வாய்ப்பும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பக்குவமும், தன்னம்பிக்கையும் பெற்று வருவாய் ஈட்டி சமூகத்தில் அந்தஸ்துடன் வாழ வழி வகுப்பதேயாகும். தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள் பொருளாதார விவகாரங்களுக்கான பாராளுமன்ற நிலைக் குழுவானது இத்திட்ட அணுகு முறைகளை அங்கீகரித்ததுடன் வேலைப்பளுவிலிருந்து சிறார்கள் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொருட்டு தேசிய சிறார் உழைப்பு அகற்றல் திட்டத்தினை ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டக் காலம் வரை நீட்டித்து அனுமதியும் வழங்கியது. மேலும், இத்திட்டத்தின் எண்ணிக்கை நூறாக உயர்த்தப்பட்டு இந்த நூறு திட்டங்களுக்காக 261 கோடி ரூபாயை அதே (1997- 2002) திட்டக் காலத்தில் ஒதுக்கியது.

தேசிய சிறார் உழைப்பு அகற்றல் திட்டங்களின் மூலம் மேறகொள்ளப்படும் செயல் வழிமுறைகள்

  • சிறார் உழைப்பைத் தடுக்கும் சட்ட அமலாக்கத்தை தீவிரப்படுத்துவது
  • வேலைக்குச் செல்லும் சிறார்களின் பெற்றோருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல்
  • பள்ளிக் கல்வி மற்றும் முறை சாராக் கல்வியை விரிவுபடுத்துதல்
  • கல்வி உதவித்தொகைகள் வழங்கி ஊக்கப்படுத்துவதன் மூலம் பள்ளியில் சேரும் சிறார்களின் எண்ணிக்கையை உயர்த்துதல்
  • திட்ட செயல் முறைகளை ஆய்வு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்

சிறார் உழைப்பு சார்ந்த தேசிய ஆதார் மையம்

1990 ஆம் ஆண்டு மத்திய அரசு மற்றும் ஐக்கிய நாட்டு குழந்தைகள் கல்வி நிறுவனமான யுனிசெப் ஆகியவற்றின் அனுசரணையுடன் விவிகிரி தேசிய தொழிலாளர் நிறுவனத்தில் தொடங்கப்பட்ட தேசிய சிறார் உழைப்புப் பிரிவானது பின்னர் 1993 ஆம் ஆண்டு மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் நிதியுதவியுடன் சிறார் உழைப்பு சார்ந்த தேசிய ஆதார மையமாக உருவெடுத்தது. இம்மையம், சிறார் உழைப்பு அகற்றலில் ஈடுபட்டு வரும் அமைப்புகளுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், திட்டம் வகுத்தல், செயல்பாடுகள் ஆகியவற்றில் சரியான வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் வழங்கும் தகுந்த வல்லுனர்கள், துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு உதவுகிறது.

மேலும் மத்திய மாநில அரசுகள், திட்டம் வகுப்பவர்கள், சட்டசபை உறுப்பினர்கள் போன்றோருக்கும், சிறார் உழைப்பு அகற்றல் தொடர்பான சரியான வழிகாட்டுதல்களையும், தகவல்கள் பகிர்தல், குறிப்பிட்ட பிரச்சனைகளில் தீர்மானிக்க வேண்டிய செயல்பாடு குறித்தும் உதவுகிறது. மேலும் இம்மையம் அரசுத்துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டர்கள், உழைக்கும் சிறாரின் பெற்றோருக்குப் பயிற்சிகளும், அளித்து வருகிறது.

இதன் மூலம் சிறார் உழைப்பு அகற்றல் திட்டங்களைச் செய்லாக்கும் முயற்சிகளில் அவர்களின் ஆற்றலும் செயலும் மேம்படுத்தப்படுகிறது. இத்துடன், சிறார் உழைப்பு தொடர்பான பல்வேறு தகவல்கள், அறிக்கைகள், கொள்கைகள் போன்றவற்றை உள்ளடக்கிய பல புத்தக வெளியீடுகளையும் தயாரித்து வெளியிடுகிறது.

சிறார் உழைப்பு அகற்றலைக் கட்டாயமாக்குவதில் ஏற்படும் முட்டுக்கட்டைகள்

சிறப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் சிறார் உழைப்பு முறை தொடர்கிறது. கட்டாயமாக்குதல் என்பது முக்கிய அம்சமாக இருப்பினும் அதை அமல்படுத்துவதில் இன்னும் முயற்சி தேவை. மத்திய, மாநில அரசுகள் குழந்தைகளுக்கான கல்வி என்கிற ஒரேயொரு அம்சத்தை மட்டும் கட்டாயமாக்க முயற்சி மேற்கொள்கிறது. வேலைக்குச் செல்லும் குழந்தைகளின் குடும்பங்களில் நிலவும் கடுமையான வறுமையை விரட்ட புதிய முயற்சிகளோ அல்லது அமலில் உள்ள நலத் திட்டங்களையோ வளர்ச்சித் திட்டங்கைளையோ சிறார் உழைப்பு அகற்றல் திட்டத்துடன் ஒருங்கிணைத்து தீவிரப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் போது, சிறார் உழைப்பு அகற்றல் திட்டம் செம்மையானத் திட்டமாக செயல்பட்டு அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்க உதவும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சங்கள்

உழைக்கும் சிறுவர், சிறுமியர், அவர்களின் வேலையை விட்டு விட்டு படிப்பை ஆர்வத்துடன் தொடரும் வகையில் சிறப்பு பாடத் திட்டங்களை வகுத்து அச்சிறார்கள் ஆர்வத்துடன் கற்கும் நோக்குடன் ஒவ்வொரு பாடத்தையும் பாடல், கதைகள் வடிவிலும் மாற்றியமைத்தல், எளிமைப்படுத்துதல்.

புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை நடத்தத் தேவையான கற்பிக்கும் உபகரணங்கள் தயாரித்தல் மற்றும் கற்றலில் இனிமை முறையில் போதிப்பதில் சிறப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய தரமான பயிற்சியளித்தல்.

சிறப்புப் பள்ளிகள் அமைக்கப்பட்ட ஊர்களில் உள்ளூர் தலைவர்கள், பள்ளி ஆசிரியர்கள், மகளிர் சங்க பிரதிநிதிகள், இளையோர் மன்ற உறுப்பினர்கள், பெற்றோர் ஆகியோரை பிரதிநிதிகளாகக் கொண்ட கல்விக் குழுக்கள் அமைத்தல் மற்றும் மூன்று மாத இடை வெளியில் கல்விக்குழு கூட்டம் கூடி சிறப்புப் பள்ளியின் செயல்பாடு, கட்டமைப்பில் ஏற்படும் பிரச்சினைகளை விவாதித்து தீர்த்தல், ஆசிரியர்களை ஊக்கப்படுத்துதல் மற்றும் பெற்றோர் உள்ளூர்வாசிகளின் ஒத்துழைப்பைத் திரட்டுதல்.

சிறப்புப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோரை மாதம் ஒரு முறை அவர்களின் வசிப்பிடங்களில் கூட்டி மாதாந்திர பெற்றோர் கூட்டம் அல்லது பெற்றோரை சிறப்புப் பள்ளி ஆசிரியர் மற்றும் கல்விக்குழு பிரதிநிதிகள் சந்தித்து குழந்தைகளின் கல்வி அவசியத்தையும், தொடர்ந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்துதல், குழந்தைகள் வீட்டில் படிப்பதற்கான சூழலை ஏற்படுத்துதல் மற்றும் வீட்டு வேலைகளிலிருந்து அவர்களை விடுவித்து படிப்பதற்கு நேரம் ஒதுக்கி பெற்றோர் ஒத்துழைக்க வேண்டுதல்.

மாநில அரசின் மகளிர் திட்ட அலுவலர்களின் ஒத்துழைப்புடன் சிறப்புப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் தாய்மார்களை ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களை அப்பகுதிகளில் அமைத்து சேமிப்பு, உட்கடன் வசதிகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் வங்கித் தொடர்பு ஏற்படுத்துதல், சுயதொழில் பயிற்சி, சிறுதொழில் கடன் வசதிகள் மற்றும் தரமான உற்பத்தி, சந்தைப்படுத்துதலில் அரசுத் துறையின் ஒத்துழைப்பை வலுப்படுத்தி பெற்றோர் நிரந்தரத் தொழில் செய்து தொடர்ந்து வருமானம் பெற வழிவகுத்தல்.

மத்திய அரசின் நேருயுவ கேந்திராவின் உதவியுடன் மற்றும் மூன்று மாத இடைவெளியில் கல்விக்குழு கூட்டம் கூடி சிறப்புப் பள்ளியின் செயல்பாடு, கட்டமைப்பில் ஏற்படும் பிரச்சினைகளை விவாதித்து தீர்த்தல், ஆசிரியர்களை ஊக்கப்படுத்துதல் மற்றும் பெற்றோர் உள்ளூர்வாசிகளின் ஒத்துழைப்பைத் திரட்டுதல்.

சிறப்புப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோரை மாதம் ஒரு முறை அவர்களின் வசிப்பிடங்களில் கூட்டி மாதாந்திர பெற்றோர் கூட்டம் அல்லது பெற்றோரை சிறப்புப் பள்ளி ஆசிரியர் மற்றும் கல்விக்குழு பிரதிநிதிகள் சந்தித்து குழந்தைகளின் கல்வி அவசியத்தையும், தொடர்ந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தல், குழந்தைகள் வீட்டில் படிப்பதற்கான சூழலை ஏற்படுத்துதல் மற்றும் வீட்டு வேலைகளிலிருந்து அவர்களை விடுவித்து படிப்பதற்கு நேரம் ஒதுக்கி பெற்றோர் ஒத்துழைக்க வேண்டுதல்.

மாநில அரசின் மகளிர் திட்ட அலுவலர்களின் ஒத்துழைப்புடன் சிறப்புப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் தாய்மார்களை ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களை அப்பகுதிகளில் அமைத்து சேமிப்பு, உட்கடன் வசதிகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் வங்கித் தொடர்பு ஏற்படுத்துதல், சுயதொழில் பயிற்சி, சிறு தொழில் கடன் வசதிகள் மற்றும் தரமான உற்பத்தி, சந்தைப்படுத்துதலில் அரசுத் துறையின் ஒத்துழைப்பை வலுப்படுத்தி பெற்றோர் நிரந்தரத் தொழில் செய்து தொடர்ந்து வருமானம் பெற வழிவகுத்தல்.

மத்திய அரசின் நேரு யுவ கேந்திராவின் உதவியுடன் உழைப்பிலிருந்து விடுபட்டு சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியரின் மூத்த சகோதர சகோதரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட இளைஞர் மன்றங்கள் அமைத்தல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்டத் தொழில் மையத்தின் ஆலோசனை பெற்று அவர்கள் வசிக்கும் கிராமப்புறங்களுக்கு ஏற்ற சுய தொழில் பயிற்சியளித்தல், சிறு தொழில் கூடங்கள் அமைத்து சுய தொழில் மூலம் வருமானம் பெறவும், உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவதில் சரியான வழிகாட்டுதல் போன்றவை மூலம் சிறந்த தொழில் முனைவோராக்குதல்.

சிறப்புப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் தந்தையர் மற்றும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்ப ஆண்களை ஒருங்கிணைத்து விவசாய சங்கம் அமைத்தல், அரசின் விவசாயத் துறை அதிகாரிகளின் ஆலோசனை பெற்று பொருத்தமான விவசாய உத்திகள், தரமான இடு பொருட்கள் கிடைக்க வழி செய்தல், நிலைத்த விவசாய முறையில் பயிற்சி போன்றவற்றில் விவசாயத் துறையின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையை ஊக்குப்படுத்துவதால் விவசாயிகள் அதிக மகசூல் ஈட்டி வருமானம் அதிகரிக்கச் செய்தல்.

மேற்கூறிய அனைத்து அம்சங்களிலும் செரிந்துள்ள ஒரு முக்கிய கரு எதுவென்று பார்த்தால் உழைக்கும் சிறார்களின் குடும்பங்களில் உள்ள மனித சக்திகள் சரியான வழியில் வழி நடத்தப்பட்டு வருமானம் பெருக்கும் சக்திகளாகவும் சேமிக்கும் சக்திகளாகவும் மாற்றம் பெற்று குடும்பப் பொருளாதார முன்னேற்றம் என்ற இலக்கை எட்டுதலேயாகும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Your Image Description