தேடல் பெட்டகம்

மானிய நிதியின் பயன்பாடு

 


மாநில நிதி ஆணைய மானியம்

மாநில அரசு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாநில நிதி ஆணையத்தினை ஏற்படுத்தும். இவ்வாணையம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியம் வழங்குவது குறித்து ஆய்வு செய்து உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். இப்பரிந்துரைகள், 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆதாரங்களை பெருக்கிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி பகிர்வு செய்யப்படுகிறது.

மாநில நிதி ஆணையம்

  • தமிழகத்தில் முதல் மாநில நிதி ஆணையம் 1994 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதுவரை மூன்று மாநில நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நான்காவது மாநில நிதி ஆணையம், தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது.
  • மாநில நிதி ஆணைய மானியம், மாநில அரசின் வரி வருவாயில் இருந்து ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.
  • ஊரக உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சிகள், வட்டார ஊராட்சிகள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் மான்யம்

  • மூன்றாவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம் மாநில வரி வருவாயிலிருந்து 10 விழுக்காடு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும், இம்மானியத்தை 58:42 விகிதத்தில் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் மானியத்திலிருந்து கிராம ஊராட்சிகள், வட்டார ஊராட்சிகள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு 60:32:8 என்ற விகிதத்தில் பிரித்து வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011- 12 ஆம் ஆண்டிற்கு ரூபாய் 3332.47 கோடியும், 2012-13 ஆம் ஆண்டிற்கு ரூபாய் 4065 கோடியும், 2013-14 ஆம் ஆண்டிற்கு ரூபாய் 4687 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த மானியம் ஒவ்வொரு மாதமும் மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்படுகிறது. குறைந்தபட்ச நிதியாக ரூ. 5 இலட்சம் கிராம ஊராட்சிகளுக்கு விடுவிக்கப்பட்டு தனியாக கணக்கு பராமரிக்கப்பட்டு, தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் வழங்கல் தொடர்பான மின் கட்டணம் செலுத்த வழி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை, மக்கள் தொகை அடிப்படையில் கிராம ஊராட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
  • நான்காவது மாநில நிதி ஆணையம் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது. மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள், 21.3.2013 அன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்த நிதி அறிக்கையில், நான்காவது மாநில நிதி ஆணையம், தனது பரிந்துரையில், மாநில சொந்த வரி வருவாயில் 10 விழுக்காட்டினை ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கலாம் எனவும், அதில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 56:44 என்ற அடிப்படையில் பகிர்ந்தளிக்கலாம் என்றும் பரிந்துரைத்ததாகவும், ஆனால், கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 58:42 என்ற விகிதத்தில் 10 விழுக்காடு மாநிலத்தில் சொந்த வரி வருவாயினை வழங்கிட அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். அதன்படி, 2014-15 ஆம் ஆண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 4968.07 கோடி அனுமதித்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மாநில நிதி ஆணைய மானியம், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு வரையறுக்கப்படாத நிதியாக வழங்கப்படுகிறது.

மானிய நிதியின் பயன்பாடு

  • மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகள், இம்மானியத்திலிருந்து நிர்வாக செலவினம் மேற்கொள்வதுடன் ஊரகப் பகுதிகளில் சொத்துக்களை உருவாக்கவும், பராமரித்திடவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், குடிநீர் பராமரிப்பு, தெரு விளக்குகள் பராமரிப்பு, சுகாதாரம், சாலைகள் மேம்பாடு போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • இம்மானியத்திலிருந்து ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்ச நிதியாக ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. அத்துடன், மக்கள் தொகை அடிப்படையிலும் நிதி வழங்கப்படுகிறது.
  • ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஆண்டுக்கு ரூ. 30 லட்சம் குறைந்தபட்ச நிதியாக வழங்கப்படுகிறது. அத்துடன், மக்கள் தொகை அடிப்படையிலும் நிதி வழங்கப்படுகிறது.

உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பு நிதி

நோக்கம்

மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளில் உள்ள இடைவெளிகளை இந்நிதியினைக் கொண்டு பூர்த்தி செய்வதே நோக்கமாகும்.

நிதி ஒதுக்கீடு

  • மாநில நிதி ஆணைய மானியத்தில் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மானியத்தில் 5 விழுக்காடு இந்த நிதிக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • ஒவ்வொரு ஆண்டிலும் அனுமதிக்கப்பட்ட நிதியில் 75 விழுக்காடு நிதி, மக்கள் தொகை அடிப்படையில் மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது.
  • மீதமுள்ள அனுமதிக்கப்பட்ட நிதியில் 25 விழுக்காடு நிதி, மாநில அளவில், ஊரக வளர்ச்சி ஆணையரால் பராமரிக்கப்படும். இந்நிதியில் இருந்தும் ஊரகப் பகுதிகளில் மிகவும் அத்தியாவசியமான பணிகள் மேற்கொள்ள முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது.

செயல்பாடு

  • மாவட்ட ஆட்சித் தலைவர்கள், இந்த நிதியினைக் கொண்டு கிராமப் பகுதிகளில் அவசியமான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் வகையில் நிர்வாக அனுமதி வழங்கலாம்.
  • இப்பணிகள், கிராம ஊராட்சிகள் மூலமோ அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மூலமோ மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • பணிகள் யாவும் ஒப்பந்தப்புள்ளி முறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எடுக்கப்படும் பணிகள்

  • குடிநீர் பணிகள்
  • தெரு விளக்குகள் அமைத்தல்
  • சாலை பணிகள்
  • பள்ளிக் கட்டிடங்கள்
  • கழிவறைகள்
  • சமையல் கூடங்கள்
  • குழந்தைகள் நல மைய கட்டிடங்கள் போன்ற பணிகள்

மத்திய நிதி ஆணைய மானியம்

  • மத்திய அரசு, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய நிதி ஆணையத்தினை ஏற்படுத்தி மாநிலங்களிலுள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நிதியினை மானியமாக வழங்குவது தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அளிக்கும்.
  • 13-ஆவது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் 2010-11 முதல் 2014-15 வரையான 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
  • 13-வது மத்திய நிதி ஆணையம், 2 வகையான மானியங்களை பரிந்துரைத்துள்ளது.

1. பொது அடிப்படை மானியம்

இந்த நிதி முழுவதும் கிராம ஊராட்சிகளுக்கே விடுவிக்கப்படுகிறது.

இந்நிதியினைக் கொண்டு கீழ்க்கண்ட பணிகளை மேற்கொள்ளவும், பராமரிக்கவும் பயன்படுத்தலாம்.

  • குடிநீர் விநியோகம்
  • தெரு விளக்குகள்
  • சுகாதார வசதி மற்றும் அவற்றுக்கான மின்கட்டணம் மற்றும் பராமரிப்பு பணிகள்

2. பொது செயலாக்க மானியம்

  • கிராம ஊராட்சிகள், வட்டார ஊராட்சிகள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் செயல்பாடு மற்றும் திறன் அடிப்படையில் பொது செயலாக்க மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது.
  • இந்நிதியைக் கொண்டு கிராம ஊராட்சி மற்றும் வட்டார ஊராட்சிகளின் சொத்துக்களை பராமரிப்பதுடன் நிர்வாக செலவினமும் மேற்கொள்ளலாம்.

ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் முத்திரைத்தாள் வரி, கேளிக்கை வரி ஆகியவற்றிலிருந்து பெறப்படும் வருவாய் நிதியினை மாநில அளவில் ஒருங்கிணைத்து கிராம ஊராட்சி மற்றும் வட்டார ஊராட்சிகளுக்கு வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு

  • ஒப்படைக்கப்பட்ட வருவாயில் இருந்து கிடைக்கும் நிதியில் மூன்றில் இரண்டு பங்கு நிதி, கிராம ஊராட்சி மற்றும் வட்டார ஊராட்சிகளுக்கு விடுவிக்கப்படுகிறது.
  • மூன்றில் ஒரு பங்கு நிதி ஊரகப் பகுதிகளில் உள்ள மிகவும் அவசியமான சிறப்புப் பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது.
  • கிராம ஊராட்சி மற்றும் வட்டார ஊராட்சிகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இந்த நிதி விடுவிக்கப்படுகிறது.

நிதியின் பயன்பாடு

  • இந்நிதியின் மூலம் கிராம ஊராட்சி மற்றும் வட்டார ஊராட்சிகளுக்கான நிர்வாக செலவினம் மேற்கொள்ளப்படுவதுடன், கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
  • திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களைப் பெற அணுக வேண்டிய அலுவலர்கள்:
    • மாநில அளவில்:   ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15
    • மாவட்ட அளவில்:  மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
    • வட்டார அளவில்:    வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி)

ஆதாரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

Your Image Description