தேடல் பெட்டகம்

திருமண சட்டங்கள்

 நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, பொருத்தம் பார்த்தால் போதும், திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்துவிடாதீர்கள். திருமணம் செய்வதற்கு சட்டரீதியிலான தகுதிகள் வேண்டும். ஆண் 21 வயது நிரம்பியவராகவும், பெண் 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் இருவரும் மன நிலை சரியுள்ளவர்களாக இருக்க வேண்டும். மணமக்கள் இருவரும் திருமணத்தின் போது வேறு திருமண பந்தத்தில் இருக்கக் கூடாது என்பதெல்லாம் அனைவருக்கும் தெரிந்த பொது விதிகள். இந்த விதிகளுக்கு உட்பட்டு திருமணம் செய்து கொள்பவர்கள் அதை முறைப்படி பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது அரசு உத்தரவு. இதற்காக பல்வேறு சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இந்து திருமண சட்டம் 1955

இச்சட்டம் இந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கும் பொருந்தும். இந்த சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். திருமணம் தடை செய்யப்பட்ட நெருக்கமான உறவு முறைக்குள் இருக்கக் கூடாது. அவர்கள் சார்ந்த சமூகத்தின் பழக்கவழக்கப்படி சடங்குகளை செய்து மணம் முடித்துக் கொள்ள வேண்டும். பொதுவாக ‘சப்தபதி’ அதாவது ஓமகுண்டத்தை சுற்றி ஏழாவது அடியை முடிக்கும் போது திருமணம் முடிவடைந்ததாக கருதப்படுகிறது.

கிறிஸ்தவ திருமண சட்டம் 1872

இந்திய கிறிஸ்தவ திருமண சட்டம் 1872 மற்றும் இந்திய விவாகரத்து சட்டம் 1869 ஆகியவை கிறிஸ்தவர்களுக்கு பொருந்தும். இச்சட்டத்தின் படி, திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஓருவரேனும் கிறிஸ்தவராக இருக்க வேண்டும். தேவாலயத்தில் அல்லது வெளியிடங்களில் கிறிஸ்தவ மதச் சடங்குகளை அனுசரித்து ஆலயப் பாதிரியார்கள் இவர்களுக்கு திருணம் செய்து வைக்கலாம். மாநில அரசால் நியமிக்கப்பட்ட கிறிஸ்தவ திருமண பதிவு அதிகாரிகள் முன்பு, திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம். இப்படி திருமணம் செய்து கொள்பவர்கள் எழுத்து மூலம் அறிக்கை கொடுக்க வேண்டும். இரு சாட்சிகள் முன்னிலையில் நிகழும் திருமணத்தில், மணமக்களில் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும். கிறிஸ்தவ திருமணங்கள் எங்கு நடந்தாலும் பதிவேடுகளில் பதிவு செய்யப்படுகிறது. இந்த பதிவின் சான்று மணமக்களுக்கு கொடுக்கப்படுகிறது.

முஸ்லிம் திருமணங்கள்

முஸ்லிம் திருமணங்கள் ஒரு ஒப்பந்தமாகவே கருதப்படுகிறது. திருமணத்தை ‘நிக்கா’ என்றும், திருமண ஒப்பந்தத்தை ‘நிக்காநாமா’ என்றும் படிவத்தில் பதிவு செய்கிறார்கள். இத்திருமணத்தின் போது ஒரு தரப்பினர் திருமணத்தை முன்மொழிய வேண்டும். இன்னொரு தரப்பினர் இதை ஒத்துக் கொள்ள வேண்டும். இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும்.

திருமணத்தின் போது மணமகளுக்கு மணமகனால் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்படும். இதற்கு ‘மொஹர்’ என்று பெயர். இந்த மொஹர் தொகை திருமணப் பதிவேட்டிலும், நிக்காநாமாவிலும் எழுதி வைக்கப்படும்.

சிறப்பு திருமண சட்டம்

மதத்தின் அடிப்படையில் இல்லாமல் எந்த மதத்தை, சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் எந்தவித தங்கு தடையும் இல்லாமல் சிறப்பு திருமணம் செய்து கொள்ளலாம். இந்த சட்டப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்கள், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள திருமணப் பதிவாளரிடம் பெயர், வயது, முகவரி ஆகிய விபரங்களுடன் திருமண அறிவிப்பை கொடுக்க வேண்டும். அப்படி அறிவிப்பு கொடுப்பவர் 30 நாட்களுக்கு முன், அந்த பதிவாளர் அலுவலகம் இருக்கும் பகுதியில் குடியிருந்திருக்க வேண்டும். அந்த அறிவிப்பை பொதுமக்கள் பார்க்ககூடிய இடத்தில் பதிவாளர், பார்வைக்கு வைப்பார்.

இத்திருமணத்திற்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்கள், அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும்.  30 தினங்களுக்குள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை என்றால் பதிவாளர் திருமணத்தை பதிவு செய்யலாம். மணமக்களும், 3 சாட்சிகளும் திருமணப் பதிவேட்டில் கையொப்பம் இட்டவுடன் திருமணம் பூர்த்தியாகிவிடும்.

சுயமரியாதை திருமணம்

மதச்சடங்குகள் இல்லாமல் செய்து கொள்ளும் திருமணமே சுயமரியாதை திருமணம் அல்லது சீர்திருத்த திருமணமாகும். சுயமரியாதை திருமணத்தை செல்லுபடி ஆக்குவதற்காக 1967 ஆம் ஆண்டு இந்து திருமண சட்டம் 7இல் திருத்தம், கொண்டுவரப்பட்டது. நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளலாம். மணமக்கள் தாம் ஒருவரை கணவன் அல்லது மனைவியாக ஏற்றுக் கொள்கிறோம் என்று தனக்கு தெரிந்த மொழியில் உறுதிமொழி ஏற்க வேண்டும். வேறு சடங்குகள் அவசியமில்லை.

தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களுக்கு மட்டுமே இது பொருந்தும். பெரியவர்கள், உற்றார் உறவினர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்தும் சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளலாம்.

ஆதாரம்: தினகரன் நாளிதழ்

Your Image Description